நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே திசையன்விளை, குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன. பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி… ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடியதென்றால் நம்பவா முடிகிறது? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினால், கருப்பட்டிக்காகவே ஓடிய ஒரு ரயிலின் கண்ணீர்க் கதை நம்மை ஆசுவாசப்படுத்தும்…
70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. அந்த ரயிலின் பின்னணி இதுதான்…
சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாக சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. இந்த தேரிக்காட்டு ரயிலின் பயணம், அந்த கிராமங்களில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க ஆரம்பித்தது…
அந்த ரயில இப்ப நெனச்சாலும் மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு. பிராயத்துல மாட்டு வண்டில தொங்கிட்டு போறதுக்கே நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். பாரி கம்பெனிக்காரன் ரயிலும் அதே வேகத்துலதான் போகும் அதுல ஏறி ஏறி இறங்குறதுன்னா ஏக குஷிதான். நான் பிச்சிவிளை ஸ்டேஷன்ல 6 மாசம் மட்டும் ஸ்டேஷன் மாஸ்டராவே இருந்திருக்கேன். மாசம் 23 ரூவா சம்பளம். அன்னைக்கி அது பெரிய காசு’’ என படுக்கையில் இருந்து எழ முடியாமல் விசும்பினார் 97 வயதாகும் ஜெயமுருகையா.
‘‘இன்னிக்கி நீங்க பார்க்கிற திசையன்விளையே வேற தம்பி. அந்தக் காலத்துல இதே தேரிகாட்ல பயினி (பதநீர்) வாசனை கமகமன்னு தூக்கும். பொழுது விடியறதுக்குள்ளே பயினிய கொண்டாகள்.


