தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஆக.31 ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 249 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை தடுப்பதற்காக இரு மாத கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கை 01.07.2024 முதல் 31.08.2024 வரை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், குழந்தை பருவ வயிற்றுப்போக்கினால் ஏற்படும் உயரிழப்புகளை பூஜ்ஜுயம் ஆக குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்
வயிற்றுப்போக்கிற்கான முக்கிய காரணங்கள் : சீம்பால் புகட்டப்படாத குழந்தைகள், சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்பு முறைகள், தாய்மார்கள் கைசுத்தம் பேணாமல் இருத்தல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு இல்லாமை ஊட்டசத்து குறைந்த குழந்தைகளும் இதில் அடங்கும்.
வயிற்றுப்போக்கினை தடுப்பதற்கான வழிமுறைகள்: கழிப்பறைகளை பயன்படுத்துதல், பாதுகாப்பான குடிநீர் அருந்துதல் மாசுபடாத உணவு உண்ணுதல், கை சுத்தம் பேணுதல், தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வயிற்றுபோக்கினை தடுக்கலாம்.
இரு மாத கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கைகள் 01.07.2024 முதல் 30.08.2024 வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இரண்டு ஓ.ஆர்.எஸ் பொட்டலங்களும், 14 துத்தநாக மாத்திரைகளும் (Zinc Tablets) விநியோகிக்க வேண்டும்.
கைகளை சோப்பு நீர் கொண்டு சுத்தமாக கழுவி சுத்தமான பாத்திரத்தில் ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ் பொடியை ஒரு லிட்டர் குடிநீரில் சேர்த்து 24 மணி நேரத்திற்குள் பருக வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், இரண்டு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 5 தேக்கரண்டி ஓ.ஆர்.எஸ் கரைசல் திரவமும், இரண்டு மாதம் முதல் இரண்டு வயதுடைய குழந்தைகளுக்கு கால் டம்ளர் முதல் அரை டம்ளர்; (50 – 100 மி.லி), இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையுடைய குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் (100 – 200மி.லி) அளவு ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுக்கவும்.
வயிற்றுப்போக்கு நிற்கும் வரை ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடுக்கப்படவேண்டும். மேலும் துத்தநாக மாத்திரைகளும் (ணுinஉ வுயடிடநவள) இரண்டு மாதம் முதல் ஆறு மாதம் வரையுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுடைய குழந்தைகளுக்கு ஒரு மாத்திரையும் சுத்தமான தண்ணீர் அல்லது தாய்பாலுடன் கலந்து தொடர்ந்து பதினான்கு நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
வைட்டமின்-A திரவம் வழங்கும் முகாம்: வைட்டமின்-A சத்துகுறைபாடு நோயை தடுக்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வைட்டமின்-A திரவம் வழங்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது உடைய ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐம்பத்தி ஒன்று (1,03,051) குழந்தைகளுக்கு ஜீலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பொற்செல்வன் செய்து வருகிறார். இந்த வைட்டமின்- A திரவம் வழங்கும் முகாம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கான்வாடி மையங்களிலும் நடைபெறவிருக்கிறது.
வைட்டமின்- A திரவம் ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி மற்றும் புத்திகூர்மைக்கு வைட்டமின்- A சத்து இன்றியமையாதது. கண்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், கண்பார்வை இழப்பு ஆகிய பாதிப்புகளை தடுக்க இந்த சத்து மிகவும் அவசியமாகிறது. வைட்டமின்-A திரவமானது 6 மாதம் முதல் 11 மாதம் உடைய குழந்தைகளுக்கு 1மி.லி அளவிலும், 12 மாதம் முதல் 5 வயது உடைய குழந்தைகளுக்கு 2மி.லி அளவிலும் வைட்டமின்-A திரவம் வழங்கப்படுகிறது. இம்முகாமில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைகள் சார்ந்த பணியாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக தீவிர வயிற்றுப்போக்கு தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் ஓ.ஆர்.எஸ் பொட்டலங்கள், துத்தநாக மாத்திரைகள் ஆகியவற்றை பெற்று பயன்படுத்தியும் மற்றும் வைட்டமின்-A திரவம் வழங்கும் முகாம்களில் கலந்து கொண்டும் ஆரோக்கியமான இளம் சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


