காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த விருதாச்சலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணை மகேஷ் குமார் 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வீட்டில் தனியாக இருந்த மகேஷ் குமார் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து மகேஷ் குமார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மகேஷ் குமார், வெண்ணிலாவை 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஷ் குமாரும் வெண்ணிலாவும் பிரேக் அப் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகேஷ் குமாருக்கு வேறொரு இடத்தில் பெண் பார்த்து வந்துள்ளனர். மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா, மகேஷ் குமார் தன்னிடம் நெருங்கி பழகும் போது, தான் கர்ப்பம் ஆனதாகவும், அதன் காரணமாக இரண்டு முறை கருக்கலைகப்பு செய்ததாகவும், தன்னை காதலித்து மகேஷ் குமார் ஏமாற்றி விட்டதாகவும் ஸ்ரீபெரும்புதூர் அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விசாரணை
மேற்கொண்டதில் இறுதியில் தான் வெண்ணிலாவே திருமணம் செய்து கொள்கிறேன் என மகேஷ் குமார் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், ஊத்துக்காட்டில் உள்ள தனது குலதெய்வ கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெற்றோரிடம் பணம்தாலி மற்றும் கல்யாணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் பொருள்களை வாங்கி வர சொல்லி உள்ளார்.
பெற்றோரும் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் மகேஷ் குமாரின் பெற்றோர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகேஷ் குமார் சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார்.
கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டதாக, காதலித்த பெண் தன் மீதுபுகார் கொடுத்த அவமானம் தாங்காமலும், பிரேக் அப் செய்த பின் காதலியோடு சேர்ந்து வாழ மனம் இல்லாத காரணத்தாலும் மகேஷ் குமார் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
விடிந்தால் குல தெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


