சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த மாநில கல்லூரி மாணவரை மற்றொறு கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவுகளில் ரெயில்வே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இனி வரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரெயில்வே காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 4-ந் தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த 5 பேர் வழிமறித்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரெயில் நிலையங்கள் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதால் பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று மோதலில் ஈடுபட்டால் புதிய சட்டதிருத்தத்தின் படி, 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


