பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ஆம் ஆண்டிற்கான வரவு & செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021-22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.


