தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஔவைக்கோட்டத்தில் உள்ள கலைமகள் ஔவையார் கோயில் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் இலக்கியம், கல்வி, மருத்துவம், சட்டம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 10 அறிஞர்களுக்கு ஔவை விருது வழங்கப்பட்டது.விழாவுக்கு டாக்டர் சு. நரேந்திரன் தலைமை வகித்தார். கவிஞர் சண் அருள்பிரகாசம், சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் பஞ்சநாதன் விக்னேசுவரன், கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கோ. ம. மோகனசுந்தரம், மெல்பர்ன் சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.விழாவை முன்னிட்டு மூலவர் ஔவையாருக்கு அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஔவை மழலையர் பள்ளிக் குழந்தைகள் ஔவையாரின் அறநெறிப் பாடல்களை மேடையில் ஒப்புவித்தனர். தமிழிசை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.ஔவைக்கோட்ட அறிஞர் பேரவையின் தலைமை அமைச்சராக முனைவர் க திலகவதி, இணைத் தலைமை அமைச்சராக முனைவர் கி மஞ்சுளா உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.முனைவர் மு கலைவேந்தன் எழுதிய ஔவையார் ஒரு பல்கலைக்கழகம், அண்ணாவின் அறிவுக்கடலில் ஆழ்ந்தெடுத்த முத்தும் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலிய தொல்காப்பிய மன்றம், தொல்காப்பியர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் நடந்த இலக்கண வகுப்பில் தேர்ச்சி பெற்ற 20 பேருக்கு இலக்கணப் புலமையர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இலக்கியத்துக்கு திருச்சி வளனறிவு, அறிவியலுக்கு பேராசிரியர் வெ சுகுமாறன், மருத்துவத்துக்கு மங்கையர்க்கரசி அசோகன், சட்டத்துக்கு சி அமர்சிங், கவிதைக்கு தஞ்சாவூர் கவிநிலா மோகன், சமூகச் சேவைக்கு ஆர் ஆர் கோவிந்தராஜன், வங்கித் துறைக்கு டி ஆல்பர்ட் ஜெயராஜ், தமிழ்ப்பணிக்கு குடந்தை வை மு கும்பலிங்கன், கல்விக்கு தி அன்பழகன், கலைக்கு சடையார்கோயில் வெ நாராயணசாமி ஆகியோருக்கு ஔவை விருது வழங்கப்பட்டது.இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஔவையார் வீதி உலா நடைபெற்றது. குடந்தை தவத்திரு திருவடிக்குடில் அடிகளார் தேரைத் தொடங்கி வைத்தார். தேர் நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி முனைவர் மு கலைவேந்தன் தலைமையில் நடந்த அறிஞர் பேரவைக் கூட்டத்தில், திருச்சியைத் தமிழ்நாட்டின் தலைநகராக அறிவிக்க வேண்டும், திருவையாறில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஔவை அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி முகில்வேந்தன், பள்ளித் தலைமை ஆசிரியை கோகிலா மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
