வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.குறிப்பாக, தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கும்பகோணம் மாநகரில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் அத்தியாவசிய தேவைக்காக வந்து செல்வதால், மழைநீர் தேங்கினால் போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்களை முறையாகப் பராமரித்து, தண்ணீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து தேவையான வடிகால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கிருமி நாசினிகளை தெளித்து கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அவர் அறிவுறுத்தினார்.ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி இ.ஆ.ப. கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் வெ. தீபனா விஸ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் திருமலை, தமிழக வெற்றிக் கழக தஞ்சை கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர். விஜய் சந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தினேஷ், மாநகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்
