அறிஞர் பேரவை கூட்டத்தில் ஆசிரியர்கள் தீர்மானம்
தமிழ்நாட்டின் தலைநகராகத் திருச்சிராப்பள்ளியை அறிவித்து, திருச்சி – தஞ்சாவூர் இடையே புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள், திருவையாறு ஒளவைக்கோட்டத்தில் நடைபெற்ற அறிஞர் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒளவைக்கோட்டத்தில் உள்ள கலைமகள் ஒளவையார் கோயில் திருவிழாவின் போது அறிஞர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. விழாவுக்கு டாக்டர் சு. நரேந்திரன் தலைமை வகித்தார். கவிஞர் சண் அருள்பிரகாசம், சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் பஞ்சநாதன் விக்னேசுவரன், கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியின் (மு) முதல்வர் முனைவர் கோ.ம. மோகனசுந்தரம், மெல்பர்ன் சுந்தரேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். விழாவையொட்டி, ஔவை கோட்டத்தில் உள்ள ஒளவையார் சிலைக்கு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றன. மழலையர் பள்ளிக் குழந்தைகளின் அறநெறிப் பாடல்கள், தமிழிசை, பரதநாட்டியம், மிருதங்க இசை நிகழ்ச்சிகள் மிக விமர்சையாக நடைபெற்றன.விழாவில் இலக்கியம், அறிவியல், மருத்துவம், சட்டம், கவிதை, சமூகச் சேவை, வங்கித் துறை, தமிழ்ப்பணி, கல்வி, கலை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 10 அறிஞர்களுக்கு ஒளவை விருதுகள் வழங்கப்பட்டன.மேலும், முனைவர் மு. கலைவேந்தன் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. இலக்கண வகுப்பில் தேர்ச்சி பெற்ற 20 பேருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஒளவையார் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.இதையொட்டி நடைபெற்ற அறிஞர் பேரவைக் கூட்டத்துக்கு, முனைவர் மு. கலைவேந்தன் தலைமை வகித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்தமிழ்நாட்டின் புவியியல் மையப் பகுதியில் திருச்சிராப்பள்ளி அமைந்துள்ளதால், வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், தெற்கில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் அங்கு எளிதில் சென்றடைய முடியும் என வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு தீர்மானம்1. தமிழ்நாட்டின் தலைநகராகத் திருச்சிராப்பள்ளியை அறிவித்து, திருச்சி – தஞ்சாவூர் இடையே புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும்.2. உலகத் தமிழின் பெருமையையும் தமிழர் பண்பாட்டு மரபையும் உலகறியச் செய்யும் வகையில், உலகத் தமிழ் மாநாட்டைத் திருச்சிராப்பள்ளியில் நடத்த வேண்டும்.3. ஆண்டுதோறும் உலக மகளிர் நாளில், இலக்கியம், கல்வி, மருத்துவம், அறிவியல், சமூகச் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு ஒளவை விருது வழங்க வேண்டும்.4. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ அறிவைப் பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பை உருவாக்க வேண்டும்.5. அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.6. தமிழர்களின் ஆட்சித் திறன், வரலாற்றுப் பெருமை, நீர்ப்பாசன மரபு ஆகியவற்றை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், கரிகாற்சோழன் பிறந்த நாளைக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் கொண்டாட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.7. தமிழக நூலக ஆணைக்குழுவை உடனடியாக அமைத்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நூல்கள் கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.8. அறிவியல் துறையில் தமிழின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் வகையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அறிவியல் தமிழ்ப் பாடத்தைப் புதிய பொலிவுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.9. திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், திட்டமிடப்பட்டுள்ள அரைவட்டச் சாலைத் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.10. திருவையாற்றுக்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும்.திருச்சியைத் தலைநகராக அறிவிப்பது முதல் திருவையாற்றின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வரையிலான கோரிக்கைகளைத் தமிழக அரசு பரிசீலித்து, மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை வலியுறுத்தியுள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்
