கும்பகோணத்தில் “தூய்மை தெரு – தூய்மை நகரம்” விழிப்புணர்வு முகாம்: தூய்மைப் பணியாளருக்கு சிறப்பு பாராட்டு
கும்பகோணம் மாநகராட்சி மண்டலம்-1க்கு உட்பட்ட 14-வது வார்டில், மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ் அறிவுறுத்தலின்படி “தூய்மை தெரு – தூய்மை நகரம்” என்ற நோக்கத்தை முன்னிறுத்தி சிறப்புத் தூய்மைப் பணி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிஞர் ஐயப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் திருமதி சா. ஏஞ்சல் முன்னிலை வகித்து தூய்மை குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 14-வது வார்டில் அமைந்துள்ள பேட்டை மேல வடக்கு தெரு பகுதியில் உள்ள சாலையில் தூய்மை தெரு, தூய்மை நகரம், தூய்மை இந்தியா, என கோலமாவினால் எழுதப்பட்டு “தூய்மை தெரு” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் தூய்மையை நிலைநிறுத்த பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பும், தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையும் இந்த அங்கீகாரத்திற்கு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அப்பகுதியில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் திருமதி பிச்சையம்மாள் என்பவர் சேவையை பாராட்டும் வகையில், அவருக்கு மாமன்ற உறுப்பினர் ஐயப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவபடுத்தினார். மேலும் அவரது உழைப்பையும் சமூகப் பொறுப்புணர்வையும் பாராட்டிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு கும்பகோணம் மாநகரில் சுகாதார மேம்பாட்டில் முக்கிய இடம் வகிப்பதாக குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, வீடுகளில் உருவாகும் குப்பைகளை நான்கு வகைகளாக எப்படி தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வழங்குவது என பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குப்பை மேலாண்மை முறைகளை சரியாகப் பின்பற்றினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், சுகாதாரமான வாழ்விடமும் நமது இல்லத்தில் உறுதி செய்யப்படலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு, தூய்மையான தெருக்களையும் ஆரோக்கியமான நகர சூழலையும் உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்றனர். மாநகராட்சியின் தூய்மை இயக்கத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்
