Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா - கண் மருத்துவ முகாம் மற்றும் சமூகப்...

கும்பகோணத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா – கண் மருத்துவ முகாம் மற்றும் சமூகப் பணியில் பங்களித்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் மற்றும் லியோ கிளப் ஆஃப் கும்பகோணம் சார்பில், இலவச கண் மருத்துவ முகாம்கள் மற்றும் சமூக நலப் பணிகளில் சிறப்பாக பங்களித்த மருத்துவர்கள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் பாராட்டு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப் தலைவர் கே.எஸ். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர்கள் என். ராஜாராமன், ஆர். சங்கர், பொருளாளர் டி.கே. ஜோதிராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் லயன்ஸ் மாவட்டம் 324 எப் முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.எம்.ஜே.எப். லயன் ஜி. மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். சமூக சேவை மற்றும் கண் மருத்துவ முகாம்களின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கண்தான விழிப்புணர்வு மற்றும் பார்வை இழப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பங்களித்தவர்களை பாராட்டினார். கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருவதுடன், கண்புரை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. விழாவில் டாக்டர் கே. வெங்கடராமன், டாக்டர் எஸ். தியாகராஜன், டாக்டர் பி. ரகுபதி, டாக்டர் எஸ். பார்த்தசாரதி, டாக்டர் எம்.ஏ. ராஜன், டாக்டர் டி.எஸ். சாந்தி மற்றும் டாக்டர் டி. சந்திரமோகன் உள்ளிட்ட மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும், கண் மருத்துவ முகாம்களுக்கு ஆதரவளித்த கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், நேட்டிவ் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை மகளிர் மேல்நிலைப் பள்ளி, முராரி ஸ்வீட் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டு வழங்கப்பட்டது. விழாவில் லயன்ஸ் மற்றும் லியோ கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சமூக நலன் கருதி மேற்கொள்ளப்படும் மக்கள் சேவைப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என விழாவில் உறுதியளிக்கப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read