Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தமிழக அரசு – புதிய கடன்...

தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தமிழக அரசு – புதிய கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது

தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தமிழக அரசு — புதிய கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதுகும்பகோணம்:

தமிழக அரசின் புதிய கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத் தேர்தலின்போது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், பிற விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மே 24-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பு தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் இணைந்து கடந்த மே 26-ஆம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மேலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், ரூ.75 ஆயிரம் வரை நிலுவையில் உள்ள கூட்டுறவு கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு முந்தைய அறிவிப்பைவிட கூடுதல் பலன் அளிப்பது உண்மை என்றாலும், தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுவரை கூட்டுறவு கடன் தள்ளுபடிகள் நில அளவை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப புதிய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 22-ஆம் தேதி சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read