மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், திருப்பனந்தாள் கிழக்குப் பகுதியில் உள்ள மண்ணியாறு மற்றும் அதன் வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் வராததால், சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு, திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ச. கலைமணி அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறியிருப்பதாவது:மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், திருப்பனந்தாள் கிழக்குப் பகுதியில் உள்ள மண்ணியாறு வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. தற்போது சம்பா பட்ட சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.இதனால், மண்ணியாறு வாய்க்கால்களில் கடைமடை வரை தண்ணீர் வந்தால் மட்டுமே சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மண்ணியாறு வாய்க்கால்களில் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையை கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் அவர்கள் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்திற்கு ஏற்கெனவே இணையதளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும், இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டு, மண்ணியாறு வாய்க்கால்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச. கலைமணி கேட்டுக்கொண்டுள்ளார்.செய்தியாளர் அ. மகேஷ்
