கும்பகோணத்தில் குடந்தை மருதம் லயன்ஸ் சங்கம் சார்பில், 2025-26-ஆம் கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.மகாமகக் குளக்கரை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, சங்கத் தலைவர் லயன் வேணு. ஜெயராமன், வட்டாரத் தலைவர் லயன் டி. நாகரத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர். சாசனத் தலைவர் லயன் சி. இளங்கோவன், மாவட்ட சங்க விரிவாக்கத் தலைவர் பி. செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பள்ளிகளைச் சேர்ந்த, பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சுமார் 420 மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விருதுகளுடன் திருக்குறள் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குச் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.விழாவில், மாவட்ட முன்னாள் ஆளுநர் ஏ. சவரிராஜ், பட்டிமன்றப் பேச்சாளர் மயிலாடுதுறை முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மண்டலத் தலைவர் எஸ். மோகன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் என். சங்கர் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, விருது பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்
