Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் பட்டு நெசவாளர்களுக்கு சேலைக்கு ரூ.150 முதல் ரூ.230 வரை கூலி உயர்வு வழங்க ஒப்புதல்

கும்பகோணம் பட்டு நெசவாளர்களுக்கு சேலைக்கு ரூ.150 முதல் ரூ.230 வரை கூலி உயர்வு வழங்க ஒப்புதல்

வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கும்பகோணத்தில் பட்டுக் கைத்தறி நெசவாளர்களுக்கு ரகத்துக்கு ஏற்ப, ஒரு சேலைக்கு ரூ.150 முதல் ரூ.230 வரை கூலி உயர்வு வழங்க, வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்களும், தொழிற்சங்கங்களும் உடன்பாடு தெரிவித்தன. இந்தக் கூலி உயர்வு அக்.15 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவித்தனர் தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட பட்டுக் கைத்தறி நெசவாளர்கள் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், கூலி உயர்வு நிர்ணயிக்கக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதன் மீது, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கும்பகோணம் கிழக்கு காவல் உதவி ஆய்வாளர், கும்பகோணம் நகர சரக வருவாய் ஆய்வர் ஆகியோர் கலந்துகொண்டு சமரசம் செய்தனர், மேலும் உற்பத்தியாளர்கள் தரப்பில் கும்பகோணம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராயா சீனிவாசன், கே.சுதர்சன், சிதம்பரநாதன் ஆகியோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் தொ.மு.ச. பொதுச் செயலாளர் வி.எஸ்.மோகன், பொருளாளர் எஸ்.ஜெ.சுப்பிரமணியன், டி.ஆர்.ஆனந்தராமன், எல்.ஆர்.செல்வம், பி.எஸ்.ரங்காச்சாரி உள்ளிட்ட 15 பேரும் பங்கேற்றனர்.கூட்டத்தில், நெசவாளர்கள் தரப்பில் 25 சதவீதம் கூலி உயர்வும், 8.33 சதவீதம் போனஸும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்குப் பதிலளித்த உற்பத்தியாளர்கள் தரப்பினர், கடந்த 9 மாதங்களில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டு நூலின் விலை சுமார் 40 சதவீதம் கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் பட்டுச் சேலையின் விலையை நுகர்வோர் மீது ஏற்றி விற்பனை செய்ய இயலாது, எனவே சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்க இயலாது என்றும், பீஸ் ரேட் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் விளக்கமளித்தனர்.இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர், கடந்த 30.09.2023 அன்று நிர்ணயிக்கப்பட்ட கூலியிலிருந்து உயர்த்தி வழங்க உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, ஒத்த நாடா ரகச் சேலைக்கு ரூ.150, கோர்வை ரகச் சேலைக்கு ரூ.200, ஜாங்களா முகூர்த்த பட்டு ரகச் சேலைக்கு ரூ.230 கூலி உயர்வாக நிர்ணயிக்கப்பட்டது.இந்தக் கூலி உயர்வு அக்.15ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்ததையடுத்து, பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்தது.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read