கும்பகோணத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் நவீன மதுபான பாரை அகற்றக்கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினர் (டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை அன்று ) வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு கருதி தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நிகழ்வு விவரம்
கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோவில் பின்புறம் மற்றும் நாகேஸ்வரர் கோவில் அருகில் ஒரு தனியார் நவீன மதுபான பார் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பார் பொதுமக்களின் நலனுக்கு உகந்தது அல்ல எனக் கூறி, அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தவெகவினர் முன்னதாக வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
ஆனால், அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தவெக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத்தினர் டிசம்பர் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் கும்பகோணம் பக்தபுரி தெருவில் இருந்து திடீரென திரண்டு வந்து ஊர்வலமாகப் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.
காவல்துறை நடவடிக்கை
முன்னதாக முற்றுகைப் போராட்டச் செய்தி அறிந்ததும், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில் குமார் தலைமையிலான காவல்துறையினர், ஊர்வலமாக வந்த தவெகவினரை அலுவலகத்தை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். சட்ட ஒழுங்கிற்குப் பங்கம் வராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், தடையை மீறி முற்றுகையிட முயன்ற தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன், முருகானந்தம், தினேஷ், செந்தில்.சுதாகர், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரைக் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து மினி பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மதுபான பாரை அகற்றக்கோரி நடத்தப்பட்ட இந்த திடீர் முற்றுகை மற்றும் தொடர் கைது நடவடிக்கையால் கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர் அ, மகேஷ்


