…
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிடும் அறிக்கை
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மீது ‘ராம்சார்’ அந்தஸ்து என்ற பெயரில் ஒன்றிய அரசு அதிகாரங்களைத் திணிப்பது கண்டனத்திற்குரியது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிடும் அறிக்கை
சென்னை நகரின் உயிர் மூச்சாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் தொடர்பாக, “ராம்சார் சதுப்பு நிலம்” என்ற அந்தஸ்தின் பெயரில், அதன் செல்வாக்கு மண்டலம் (Zone of Influence) மற்றும் நிர்வாகத் தீர்மானங்களை ஒன்றிய அரசு அமைப்புகள் நிர்ணயிப்பதாகத் தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
பள்ளிக்கரணை என்பது வெறும் இயற்கை வளம் அல்ல;
சென்னை நகரத்தின் வெள்ள பாதுகாப்பு அரண்,
நீர் சுழற்சி கட்டுப்பாட்டு மையம்,பல்லுயிர் வாழ்விடமாகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலத்தின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், மாநில அரசையும், உள்ளூர் சமூகங்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் புறக்கணித்து, ஒன்றிய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ராம்சார் ஒப்பந்தம் என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு கருவி மட்டுமே; அதை மாநிலங்களின் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் ஆயுதமாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஏற்கனவே, மத்திய சுற்றுச்சூழல் அனுமதிகள், தேசிய அமைப்புகளின் தலையீடு, திட்ட அனுமதிகளில் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் ஒன்றியத்திடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன.
எனவே. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிர்வாகம் முழுமையாகத் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும். செல்வாக்கு மண்டலம் குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி அமைப்புகள்,சுற்றுச்சூழல் நிபுணர்கள்,மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகள் கட்டாயமாகப் பெறப்பட வேண்டும்.
ராம்சார் அந்தஸ்து, மாநில உரிமைகளைக் குறைக்கும் கருவியாக அல்ல; பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒத்துழைப்பு தளமாக மட்டுமே செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் கூட்டாட்சியைச் சிதைக்கும் முயற்சிகளையும், அதிகாரக் குவிப்பையும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து வலிமையாக எதிர்க்க வேண்டும்.


