தமிழக அரசியலில் மதச்சார்பற்ற அரசியலின் மையமாக விளங்கும் திமுக தலைமையிலான கூட்டணியில், ஏற்கனவே காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள. கட்சி,மனிதநேய மக்கள் கட்சி (மமக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML), மஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் கணிசமான ஆதரவையும், செயல்வீரியமுள்ள படையையும் கொண்டுள்ள எஸ்டிபிஐ கட்சியும் இந்த கூட்டணிக்குள் இணைந்தால், அது அரசியல் ரீதியாக கூடுதல் பலத்தை வழங்கும் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சமூக நீதி, சிறுபான்மை பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் போன்ற விவகாரங்களில், திமுகவும் எஸ்டிபிஐயும் ஒத்த கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீப காலமாக பல பகுதிகளில் திமுக மற்றும் எஸ்டிபிஐ தலைவர்கள் ஒரே மேடைகளில் தோன்றுவதும், பரஸ்பர நெருக்கம் அதிகரிப்பதும், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.திமுகவின் அரசியல் நகர்வுகளை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை பார்க்க முடிகிறது.
எஸ்டிபிஐ கட்சியின் இளைஞர் ஆதாரம், கள அரசியலில் அவர்களின் செயல்திறன் ஆகியவை, தேர்தல் நேரங்களில் கூட்டணிக்கு ஒரு புதிய வேகத்தை அளிக்கக்கூடும் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளின் அரசியல் சமநிலையும், அவர்களின் அடையாளமும் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
.
இந்த சூழலில், திமுக தலைமை இந்த விவகாரத்தை அரசியல் நுணுக்கத்துடன், சமநிலையுடனும், அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் கையாள வேண்டும் என்பதே அரசியல் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூட்டணி என்பது எண்ணிக்கை மட்டுமல்ல; அது பரஸ்பர மரியாதையும், தெளிவான அரசியல் புரிதலும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக வலுப்பெறுகிறது.
எஸ்டிபிஐ இணைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா, அல்லது அரசியல் புரிதல் அளவிலேயே தொடருமா என்பதைப் பொறுத்து, திமுக கூட்டணியின் எதிர்கால அரசியல் வடிவம் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

