பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் – SDPI மகளிரணி கடும் கண்டனம்!!
SDPI கட்சி மகளிரணி மாநில தலைவர் K. பாத்திமா கனி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சி. வே. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்களை குறித்து வெளியிட்டுள்ள அவமதிப்பான மற்றும் இழிவான கருத்துகள் தீவிரமாகக் கண்டிக்கப்படுகின்றன. அதிலும் சட்ட ஒழுங்கை பேணுகின்ற மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் பெண்களை தரக்குறைவாக பேசி இருப்பதை SDPI கட்சியின் மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது.
பொதுமக்கள் முன்னிலையில் பேசும் அரசியல் தலைவர்கள் தங்களது வார்த்தைகளில் பொறுப்புணர்வையும், சமூக மரியாதையையும், பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் இத்தகைய பெண்விரோத கருத்துக்கள், சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றன. ஒரு பெண் நடிகை என்பதற்காக அவளை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் செயலாகும். இத்தகைய மனநிலைகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளன.
இந்நிலையில், தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுத்து வரும் “கனவு திட்டம்” என்பது மாணவர்களின் முன்னேற்றம், மக்களின் முன்னேற்றம், கல்வி ஆகியவற்றை வலுப்படுத்தும் வளர்ச்சிக்கான திட்டங்களே ஒழிய, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்கான திட்டம் அல்ல. மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் இத்தகைய உன்னதமான திட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, இத்தகைய கருத்துகளை வெளியிட்டவர்கள் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும், எதிர்காலத்தில் பெண்களை அவமதிக்கும் அரசியல் முறைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் SDPI கட்சி மகளிரணி சார்பாக கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


