பலமுறை புகாருக்கு பதில் இல்லை: புதிய எம்.எல்.ஏ. வினோத் ரவி அதிரடி நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அசூர் பைபாஸ் சாலையில் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி தீப்பற்றி கடும் புகைமூட்டம் உருவாகி, அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதிதாக பொறுப்பேற்ற இளைஞர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத் ரவி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குப்பை மேடையை விரைவாக அகற்றி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு முந்தைய சட்டமன்ற உறுப்பினர் ஏன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இனி மாநகராட்சி நிர்வாகம் சீர்பெற்று செயல்படுமா என்ற ஆதங்கக் குரலும் அப்பகுதி மக்களிடையே ஒலிக்கிறது. புதிய எம்.எல்.ஏ.வின் துரிதமான செயலால், அப்பகுதி மக்கள் இனி சுகாதாரமான சூழலில் நிம்மதியாக வாழ முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிருபர் அ.மகேஷ்
