கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி: வேளாண் டிராக்டர்களுக்கு வரிவிலக்கு அளிக்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில், வேளாண் டிராக்டர்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஜூன், 8ஆம் தேதி திங்கள்கிழமை கும்பகோணத்தில் டிராக்டர் பேரணி நடத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
கும்பகோணம் பக்தபுரி தெரு வழியாக வந்து ரவுண்டனாவில் இருந்து தொடங்கிய பேரணியில் விவசாயிகள் டிராக்டர்களுடன் பங்கேற்று, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் நீதிமன்றச் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம். ராமலிங்கம் தலைமையில், கோட்டாட்சியரை சந்தித்து பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்புவதற்கான கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவில், வேளாண் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் டிராக்டர்களுக்கு ஜிஎஸ்டி, வாட் மற்றும் சாலை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதாகவும், டீசலுக்கும் வாட் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மற்றும் துரித நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை இயக்க அனுமதி இல்லாத நிலையில் சாலை வரி வசூலிப்பது நியாயமற்றது எனவும், உழவு, விதைப்பு, மருந்து தெளித்தல், களை எடுப்பு, வேளாண் பொருட்கள் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வேளாண் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வேளாண் டிராக்டர்களை வேளாண் கருவிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும், டிராக்டர் டீசலுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்க வேண்டும், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், ஏழு நாடுகளில் வேளாண் டிராக்டர்களுக்கு வரி இல்லை எனவும், சாலை வரி மற்றும் தேசிய பேரிடர் வரி (என்.சி.சி.டி) ஆகியவற்றை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றிருந்தன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் மனு இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தப் பேரணி மற்றும் மனு அளிப்பு நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்


