Homeதமிழ்நாடுசென்னையில் தீபாவளியையொட்டி வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் தீபாவளியையொட்டி வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள சூழலில், அதிகாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் மழையை தராத நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில், அர்னாப் மற்றும் முரசு என இரு புயல்கள் வங்கக்கடலில் உருவாகி, ஆந்திர பிரதேசம்வழியே கரையை கடந்ததுடன், பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி சென்று விட்டன.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதிகாலையில் மழைஇந்த நிலையில், தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 15 மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி மித அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் சென்னையில் பரவலாக மழை பெய்தது.

சென்னையின் வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், பூந்தமல்லி, பெரியமேடு, சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஏறக்குறைய அரை மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பின்னர் விட்டு, விட்டு காலை 5.30 மணி வரை மழை தொடர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read