பருத்தி விவசாயிகளை பாதுகாக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பருத்தி விவசாயிகளை பாதுகாக்கவும், வேளாண் கொள்கைகளில் திருத்தம் செய்யவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.எம். ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பருத்தி இறக்குமதி வரியை நீக்கக்கூடாது என்றும், வேளாண் ஆணையம் பரிந்துரைத்த C2 + 50% அடிப்படையில் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கரும்பு வரைவு சட்டம் 2026-ஐ கைவிட வேண்டும், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இதனுடன், விவசாயிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத ஒன்றிய அரசை கண்டித்தும், பருத்தி இறக்குமதி வரி நீக்க கோரி தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையை வழக்கம்போல் ஜூன் 12ஆம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உர விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், வேளாண் கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், குடிமராமத்து பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் விவசாயிகள் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும், வாய்க்கால் பராமரிப்பை நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.இதில் ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் க. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர் அ.மகேஷ்

