நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியர்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். சாரண சாரணியர் இயக்க ஆணையர் சாமுவேல் சத்தியசீலன், செயலாளர் சிவகுமார், பொருளாளர் ஆபிரகாம் இமானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்கத்தின் துணை பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், சாரண சாரணியர்களின் குறிக்கோள் எப்பொழுதும் தயாராக இருத்தல் என்பதாகும். எனவே, சாரணர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படும்பொழுது அதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நல்லொழுக்கம், நன்னெறி உடையவர்களாக வாழ்தல் வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மக்களாக உருவாகி நாட்டிற்கு சேவை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முகாம் தேர்வாளர்கள், பிரான்சிஸ் அலாய் மற்றும் பவானி பாய், உதவி தேர்வாளர்கள் சரவணன், வேலவன், ஆல்வின்,காந்திமதி மற்றும் வளர்மதி ஆகியோர் சாரண, சாரணியர்களை மதிப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தனர்.அதன் பின்னர், ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக சாரணர் இயக்கத்தின் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 11 பள்ளிகளைச் சார்ந்த 18 பொறுப்பாசிரியர்களும், நூற்றுக்கு மேற்பட்ட சாரண சாரணியர்களும் முகாமில் பங்கேற்றனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர்,கணித ஆசிரியர் ஜெயக்குமார் டேவிட், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், அலுவலக பணியாளர்கள் ஜோசப் ஜெபராஜ், ஜெபஸ்டின், காளிமுத்து, ரூபன், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
