உரிமைகளை போராடி வென்றெடுத்த உழைப்பாளிகளின் உயர்வை போற்றும் மே தினத்தில் உழைப்பின் மூலம் இந்த நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மே தினம், தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை, ஓய்வு, உறக்கம் மற்றும் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களின் வெற்றியை நினைவுகூர்கிறது. இந்நாள், உழைப்பின் மதிப்பை உயர்த்துவதோடு, தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது.
ஆனால், கார்ப்பரேட் நலன்களுக்காகவே தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் தியாகத்தால் கிடைக்கப்பெற்ற உரிமைகள், ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களால் பறிக்கப்படுகின்றன. இந்த சட்டங்கள், தொழிலாளர் நலன்களை நீர்த்துப்போகச் செய்வதோடு, ஒப்பந்த மயமாக்கல், தொழிற்சங்க உரிமைகளை பறித்தல், பணி நேர நீட்டிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்கள் திருத்தப்படுவது தொழிலாளர்களுக்கு பெரும் அநீதியாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்பே அடித்தளமாக விளங்குகிறது. ஆகவே, அவர்களின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, நியாயமான ஊதியம் மற்றும் அனைத்து உரிமைகளை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
-நெல்லை முபாரக்
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.


