Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட விவசாயி தம்பதியர் மீது அரிவாள் வெட்டு -கோவில் பூசாரி...

கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட விவசாயி தம்பதியர் மீது அரிவாள் வெட்டு -கோவில் பூசாரி கைது

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கூத்தனூர் பகுதியில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த பூசாரி முரளி என்பவர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தட்டிக் கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவி மற்றும் அவரது மனைவி உஷா தம்பதியரை செவ்வாய்க்கிழமை அன்று கோவில் பூசாரி முரளி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில் விவசாயி ரவிக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்ட நிலையில் தடுக்க முயன்ற உஷாவுக்கு முகத்தில் அரிவாள் வெட்டுக் காயமும் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரவி மற்றும் உஷாவை மீட்டு இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7ஆம் தேதி அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் நம்மிடம் கூறுகையில்: விவசாயி ரவி மற்றும் உஷா தம்பதியினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நன்னிலம் வட்டம் கூத்தனூரில் வசித்து வருவதாகவும், அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் கோவில் பூசாரி முரளி என்பவர், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவிலை ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும், கோவிலின் வரம்பை மீறி மதில் சுவர் எழுப்பி இரும்பு கேட் அமைத்ததால், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடம் அடைக்கப்பட்டுள்ள தாகவும், இதனால் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.அத்துடன், கோவிலில் இருந்து கிடைக்கும் குடிநீரையே தங்களது அன்றாட தேவைக்கான முக்கிய ஆதாரமாக பயன்படுத்தி வரும் நிலையில், அந்தக் குடிநீரைப் பயன்படுத்துவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.எனவே, கோவில் ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை மீட்டெடுப்பதுடன், திரௌபதி அம்மன் கோவிலை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், குடிநீர் பயன்பாட்டிற்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரளம் போலீசார் மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கோவில் பூசாரி முரளியை வலை வீசி தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read