தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் எல்.பி.எஸ். சாலையில் செயல்பட்டு வரும் ஏ.ஜெ.சி. ஆங்கிலப் பள்ளியின் தாளாளரும், தி அசெம்ப்ளி ஆஃப் ஜீசஸ் கிறிஸ்ட் சொசைட்டியின் தலைவருமான பாஸ்டர் சி. ஞானதாஸுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.பாஸ்டர் சி. ஞானதாஸ், தனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த மார்ச் 4-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு (CONT P.(MD) No.2108 of 2026) தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதி எல். விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 4-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து வைத்து, 2019-ஆம் ஆண்டு உள்துறை (காவல்) துறை அரசாணை எண் 139-ன் அடிப்படையில், தேவையான கட்டணத்தை மனுதாரர் செலுத்திய பிறகு, பாஸ்டர் சி. ஞானதாஸுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த ஜூலை 6-ஆம் தேதி நள்ளிரவு, கும்பகோணத்தில் உள்ள ஏ.ஜெ.சி. ஆங்கிலப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த சில மர்ம கும்பல் பாஸ்டர் சி. ஞானதாஸை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், உயர்நீதிமன்றம் பாஸ்டர் ஞானதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.செய்தியாளர் அ.மகேஷ்

