நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் ஒரு மிக முக்கியமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
நீங்கள் பெட்ரோல் பங்கில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டுவிட்டு, உங்கள் மொபைல் மூலம் ஜி-பே அல்லது ஃபோன்-பே போன்ற யூபிஐ முறையில் பணம் செலுத்தினால், அதற்காக ஐந்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதிமுறை வரும் அக்டோபர் பதினைந்தாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
அதாவது, ‘எம்டிஆர்’ எனப்படும் வியாபாரிகளுக்கான தள்ளுபடிக் கட்டணமாக இந்த ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும் என ‘என்பிசிஐ’ அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது.
இந்த புதிய அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாகக் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள், பல நேரங்களில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல்தான் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவார்கள்.
இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க முடியாது என்பதால், தாங்கள் எப்படி அந்த ஐந்து ரூபாயை அரசுக்குச் செலுத்த முடியும் என உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்தால், பங்க் உரிமையாளர்களுக்கு தோராயமாக இரண்டு ரூபாய் நாற்பது காசுகள் மட்டுமே லாபமாகக் கிடைக்கிறது.
இப்படிப்பட்ட மிகக் குறைந்த லாபத்தில், இந்த யூபிஐ கட்டணத்தையும் எப்படி எங்களால் ஏற்க முடியும் என கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பங்க் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே நிர்ணயம் செய்வதால், இந்தக் கட்டணத்தை ஈடுகட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்களால் தாங்களாகவே எரிபொருளின் விலையை உயர்த்த முடியாது.
எனவே, பெட்ரோல் பங்குகளைப் பொறுத்தவரை இந்த ‘எம்டிஆர்’ கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என அகில இந்தியப் பெட்ரோலிய டீலர்கள் சங்கம் மத்திய நிதியமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.
ஒருவேளை அரசு இந்த புதிய கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை யூபிஐ மூலமாகப் பெறுவதை முற்றிலுமாக நிறுத்தப் போவதாக உரிமையாளர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அவ்வாறு நடந்தால், வாகன ஓட்டிகள் மீண்டும் பணத்தை நேரில் கொடுத்து பெட்ரோல் போட வேண்டிய பழைய நிலைமைக்கே தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
