காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேக்கேதாட்டு அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், ராசிமணல் அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்கவும் வலியுறுத்தி நடைபெறவுள்ள பிரசாரப் பயணத்துக்கு ஆதரவு அளிக்குமாறு, அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக சென்னையில் எடப்பாடி கே. பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த பி.ஆர். பாண்டியன், கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார் அதில் காவிரி நீரை நம்பி தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதையடுத்து, மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் ராசிமணல் அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பிரசாரப் பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பிரசாரப் பயணம் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் காவிரி நீர் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னையில் பிரசாரப் பயணம் நிறைவடைய உள்ளது.இந்தப் பயணத்தில் அதிமுக சார்பில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமியிடம் பி.ஆர். பாண்டியன் கேட்டுக்கொண்டார்.மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பின்போது அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில துணைச் செயலாளர் குடவாசல் சாமிநாதன், சென்னை மண்டல செய்தித் தொடர்பாளர் சைதை சிவா ஆகியோர் உடனிருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
