Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுக! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுக! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக அரசுப் பள்ளிகளில் 2012 முதல் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12,000-த்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் மற்றும் கௌரவமான ஊதிய உயர்வு கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர், மேலும் மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை, இது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், ஜூலை 8 முதல் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் அறவழிப் போராட்டம், தங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் முயற்சியாகும்.

2021 தேர்தல் அறிக்கையில், திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வருகின்றனர். இருப்பினும், அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது மற்றும் ஜனநாயக விரோதமானது.

எஸ்டிபிஐ கட்சி, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணி நிரந்தரம் செய்வதுடன், கௌரவமான ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். 13 ஆண்டு கால பரிதாபகரமான நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, இவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Must Read