வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு தட்டுப்பாடின்றி சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணத்தில் வியாழக்கிழமை நூதன முறையிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்டோர் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டி பேரணியாக புறப்பட்டனர். பின்னர் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு திரண்டு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஏ.ஜி. பாலன் மற்றும் ஒன்றிய செயலாளர் ப. சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஏ. ராஜேந்திரன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் பா. சரண்யா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் க. சுந்தர்ராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ஆர். பழனி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் எம். ரவி, நிர்வாகிகள் ஆர்.கே. ரவீந்திரன், கே. நாராயணன், கே. சரவணன், எம். மணிகண்டன், வழக்கறிஞர் க. மொரார்ஜி, எம். மாதாமணி, எம். புகழேந்தி, கே. கலைச்செல்வி உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்.கே. ரவீந்திரன் நன்றி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும், உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு போதுமான அளவில் சிலிண்டர்கள் வழங்க வேண்டும், எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதிகப்படியான வரிச்சுமைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், பெண்கள் சிலர் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, அதைச் சுற்றி வளம் வந்து ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நூதன போராட்டம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்ததுடன், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
போராட்டத்தையொட்டி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார மற்றும் எரிபொருள் விலை நிர்ணயக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.
செய்தியாளர் அ. மகேஷ்


