டெல்லி பேரணிக்கு தஞ்சை வடக்கு மாவட்டத்திலிருந்து 500 பேர்: விலைவாசி உயர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் CPI தீவிர எதிர்ப்புகும்பகோணம்:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் கூட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அ. பாரதி அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால இயக்கப் பணிகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், பொருளாளர் ஏ. ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் க. சுந்தர்ராஜன், மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் பா. சரண்யா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். மாதாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திலிருந்து 500 தோழர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், வி.பி.சி ராம்ஜி என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து பழைய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தேர்தலின் போது விவசாயிகளின் பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். கடன் தள்ளுபடி அறிவிப்புகள் புதிய ஆணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரூ.75,000 ரூபாய்க்கு கீழ் நிலுவையில் உள்ள கடன் முழு தள்ளுபடி என்றும் ரூ 75,000 ரூபாய்க்கு மேல் கடன் இருப்பவர்கள் 35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கர் உள்ளவர் சிறு விவசாயி என்கிற முறையில் முழு கடன் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் எனவும், முந்தைய திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது நிலம் அளவீடு கொண்டு அறிவிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது, கடன் தொகையை அளவாக கொண்டு அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே, தமிழக அரசு இரண்டாவது முறையாக கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குப்படியே கடன் தள்ளுபடி அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் வரும் ஜூன் 29ஆம் தேதி கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.இதில் பெருந்திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மாநகர செயலாளர் ஏ.ஜி.பாலன் நன்றி கூறினார்.செய்தியாளர் அ.மகேஷ்

