Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்நகர நில ஆவணப் பிழைகள்: தீர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

நகர நில ஆவணப் பிழைகள்: தீர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

நகர நில ஆவணப் பிழைகள்: தீர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

2009 TSLR திட்டம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தக் கோரி வேளாண்மைத் துறை அமைச்சரிடம் கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் ச. ஐயப்பன் மனு

நிலம் என்பது ஒரு குடும்பத்தின் மிகப்பெரிய சொத்து. ஆனால், அந்த நிலத்திற்கான ஆவணங்களிலேயே பிழைகள் இருந்தால், அதன் விளைவுகள் தலைமுறைகளைப் பாதிக்கும். தமிழகம் முழுவதும் 2009 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட புதிய நகர நில அளவை (TSLR) திட்டத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நில ஆவணப் பிழைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் ச. ஐயப்பன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவியிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதிய நகர நில அளவைப் பதிவுகள் தயாரிக்கப்பட்டபோது பல இடங்களில் நில உரிமை, எல்லை, பரப்பளவு, களவரைபடங்கள் (FMB) மற்றும் நகர நிலப் பதிவேடுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்மையான நில உரிமையாளர்கள் தங்களது சொத்துகளின் உரிமையை நிரூபிப்பதிலும், சொத்து பரிமாற்றங்கள் மற்றும் பிற நிர்வாகச் செயல்பாடுகளிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மனுக்கள் அளித்தும், தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, 2009 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட நகர நில அளவை (TSLR) திட்டம் தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறான நிலப் பதிவுகளைச் சரிசெய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்றும், “விசாரணையில் தவறுகள் அல்லது அலட்சியம் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ச. ஐயப்பன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

நில ஆவணங்களில் ஏற்படும் ஒரு சிறிய பிழைகூட, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் சொத்து உரிமையையும் நீண்ட காலம் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் அ.மகேஷ்

Must Read