தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக்குழு கூட்டம், கும்பகோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. உலகநாதன், மாநிலக்குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.எம். ராமலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், குரு. சிவா, எஸ். கண்ணழகன், மாவட்ட துணைத் தலைவர் எம். புகழேந்தி, மாவட்ட பொருளாளர் டி.ஆர். குமரப்பா உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.கூட்டத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பையும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல், மேகதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியை வன்மையாகக் கண்டித்தனர். இந்த முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும், தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் மற்றும் வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை முன்னிறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதேபோல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல, தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் உள்ள கிடங்குகளில் தேங்கியுள்ள பழைய சாக்குகளை உடனடியாக அகற்றி, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.செய்தியாளர் அ.மகேஷ்
