கும்பகோணம் சௌராஷ்டிரா புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்யகாளியம்மன் திருக்கோவிலின் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ சமபந்தி அன்னதானப் பெருவிழாவை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கி கோவில் நிர்வாகம் கவுரவித்தது.ஸ்ரீ சத்யகாளியம்மன் சேவா டிரஸ்ட் தலைவர் எம்.பி. கண்ணன் தலைமை வகித்தார், டி.பி. கிருஷ்ணன் மற்றும் ஆர். சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். திருமதி கே. அபிராமி வரவேற்புரை நிகழ்த்தினார்.விழாவில் ஹரிதா மஹால் நிறுவனர் என்.எம்.ஆர். மோகன், குழந்தைகள் நல முதன்மை மருத்துவர் டாக்டர் எம்.ஆர்.வி. மணிவண்ணன், சி.ஏ.ஆர். கணேஷ், ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கே. லதா, சௌராஷ்டிரா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் (ஓய்வு) தலைமை ஆசிரியர் திருமதி ஆர். சுமதி, சூர்யா பட்டு மஹால் நிறுவனர் பி.எஸ். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் தேசிய உணர்வு, ஒழுக்கம் மற்றும் ஆன்மிகப் பண்புகளுடன் வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள குடிமக்களாக திகழ வேண்டும் என வலியுறுத்தினர். நாட்டுப்பற்றும் தெய்வீக நெறியும் இணைந்த வாழ்க்கை தனிமனித முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பானாதுறை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, ஏ.ஆர்.ஆர். மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஓரியண்டல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, நகர மேல்நிலைப் பள்ளி, நேட்டிவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, வை. கோவிந்தசாமி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, மார்னிங்ஸ்டார் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி, புனித சவேரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டப்பட்டனர்.மேலும், மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்கி, சமுதாயத்திற்கு பயனுள்ள நபர்களாக உயர வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.இறுதியாக ஏ.ஆர். சரவணன் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சௌராஷ்டிரா சமூகத் தலைவர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ சத்யகாளியம்மன் திருக்கோவில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

