Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வரிசை முறையில் லாரிகளுக்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடு புகார் -மாவட்ட...

கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வரிசை முறையில் லாரிகளுக்கு டோக்கன் வழங்குவதில் முறைகேடு புகார் -மாவட்ட ஆட்சியரிடம் ஏஐசிசிடியூ அமைப்பின் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு

கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் ஏற்றுதல் இறக்குதல் பணியில் லாரிகளுக்கு வரிசை முறையில் டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஏஐசிசிடியூ தஞ்சை மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக முதன்மை மேலாளரிடமும் நேற்று மனு அளித்தனர் இந்த மனுவை ஏஐசிசிடியூ சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். மதியழகன் வழங்கினார்.அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைத்து லாரிகளுக்கும் டர்ன் முறையில் எந்தவித முன்னுரிமையும் இன்றி வரிசையில் டோக்கன் வழங்க வேண்டும் என்றும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் தற்போது வழங்கப்படும் வேறுபட்ட வாடகை முறையை நீக்கி, இரு பகுதிகளுக்கும் ஒரே வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை சப் ஒப்பந்ததாரர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், எனவே தற்போதைய சப் ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தகாரர்களை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளர் மெய்கண்டமூர்த்தியை வேறு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு கும்பகோணம் நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். மதியழகன் தெரிவித்துள்ளார்.இந்த மனு வழங்கும் நிகழ்வில் சங்கத் தலைவர் ஆர். அருண்ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.எம். ராஜேந்திரன், தங்கதுரை, ஏ. ராஜேந்திரன், எம். மகேஸ்வரன், சத்தியராஜ், பன்னீர்செல்வம், பாக்கியராஜ், சூரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்

Must Read