Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் முடக்கம்: தலையில் முக்காடு...

திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிகள் முடக்கம்: தலையில் முக்காடு அணிந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு, நெல் கொள்முதல் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.போராட்டத்தில் பேசிய விவசாயி கலைமணி, ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், கொள்முதலுக்குத் தேவையான சாக்குப் பைகளும் போதுமான அளவில் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.அறுவடை உச்சக்கட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், அரசு நெல்லை கொள்முதல் செய்யாததால் அறுவடைப் பணிகளையே நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.விவசாயி கலியமூர்த்தி பேசுகையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், சேமிப்புக் கிடங்குகள் பற்றாக்குறையால் அவை திறந்த வெளியில் குவித்து வைக்கப்படுவதால் மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.கடந்த ஆண்டு மழையால் பாதுகாப்பின்றி கிடந்த நெல் மூட்டைகளில் நெற்பயிர்கள் முளைத்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் நிகழாத வகையில் போதுமான சேமிப்புக் கிடங்குகள் அமைத்து, நெல்லை பாதுகாப்பாக சேமிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.மேலும், கடந்த இரண்டு நாட்களாக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இருப்பதால், விவசாயிகள் தாங்களே தங்களின் நெல் மூட்டைகளை இரவு, பகலாக காவல் காக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கைகளுக்கு, அரசு உடனடியாக தீர்வு கண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளை விரைந்து மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது செய்தியாளர் அ.மகேஷ்

Must Read