இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 63 சுங்கச்சாவடிகளில் 36 சுங்கச் சாவடிகளில் இன்று (ஜூன்.02) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்.01 முதலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும் இந்த சுங்கக் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகள் எதனையும் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல், முழுக்க முழுக்க கார்ப்பரேட் வணிக நோக்கோடு தனது பார்வையை செலுத்தி வருகின்றது ஒன்றிய பாஜக அரசு. இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கும். சுங்கக் கட்டண உயர்வின் விளைவாக சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் உயர்ந்து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் ஏற்றப்படும் சூழலே உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான சுங்க சாவடிகளில் முறையான சாலை பராமரிப்பு இல்லாமலும், சாலை உபயோகிப்பாளர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் தான் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பது இல்லை. ஆனால், ஆண்டுதோறும் இரு கட்டங்களாக கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு வருகின்றது.
வாகனங்கள் அதிகமாகும் போது அதன் அடிப்படையில் கணக்கிட்டு சுங்க கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்ற சுங்க சாவடிகளுக்கான நிபந்தனையும் காற்றில் பறக்கவிடப்படுகிறது. மட்டுமின்றி, ஒரு சுங்கச்சாவடிக்கும், இன்னொரு சாவடிக்கும் இடையே 60 கிலோமீட்டர் துார இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக, குறுகிய துார இடைவெளியில் பல சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 63 சுங்கச் சாவடிகள் இருக்கும் நிலையில் மேலும் கூடுதலாக 20 சுங்கச் சாவடிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த எண்ணிக்கை உயர்வால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளுமே அதிகளவில் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கான காலம் முடிந்துவிட்ட நெடுஞ்சாலைகளில், சாலைப் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டண வசூல் தொடர்வதும், அந்தச் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே இருந்துவருகின்றன. இதுபோன்று நெடுஞ்சாலைத் துறையில் முறைப்படுத்த வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்திக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
நெடுஞ்சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், பராமரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகியன சுங்க கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்? காலக்கெடு என்ன? என்பதற்கான எந்த வரையறையுமின்றி சுங்கக் கட்டணம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை வரைமுறையின்றி நாடு முழுவதும் தொடர்கிறது. ஏற்கனவே விற்பனை வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றால் திண்டாட்டத்தில் இருக்க, இந்த சுங்கக் கட்டண உயர்வு உள்ளூர் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தாக்கம் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து ஏழை-எளிய, நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கின்றன.
ஆகவே, சுங்கக் சாவடி கட்டண வசூலிப்பை அரசு முறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடமிருந்து விடுத்து அரசே ஏற்று நடத்தி சுங்கச்சாவடி இல்லாத சாலையாக நெடுஞ்சாலைகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


