கடந்த மே 24 அன்று, அலிகார் மாவட்டத்தின் அத்திரவுலியில் ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தது. அத்திரவுலியில் உள்ள மொஹல்லா கஸ்ஸாபன் பகுதியைச் சேர்ந்த அகீல், அர்பாஸ், கதீம் மற்றும் மற்றொரு அகீல் ஆகியோர், மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டி, இந்து வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய ஒரு வன்முறைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இந்த கும்பல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும், எஸ்டிபிஐ கட்சியின் உத்தரபிரதேச மாநில துணைத் தலைவர் மாஸ்டர் மகேந்திர சிங் தலைமையிலான நிர்வாகிகள் குழு மருத்துவமனையில் சந்தித்தது.தாக்குதல் விவகார்த்தில் நீதியை நிலைநாட்டுவதில் அவர்களுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இந்தக் குழுவில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சர்வர் அலி, மாநிலச் செயலாளர் ஹாரூன் சவுத்ரி, ஹாபூர் சட்டமன்றத் தலைவர் டாக்டர் ரஹிமுதீன் மற்றும் காசியாபாத் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் தோமர் ஆகியோர் இடம்பெற்றனர்.
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் பன்னிரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் அலிகார் காவல்துறை தெரிவித்துள்ளது.


