நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாகவழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கஉத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறி உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


