Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்தவெக அரசு தேர்தல் வாக்குறுதிபடி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு...

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிபடி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.4,500 வழங்க திருவள்ளுவர் விவசாயிகள் நல சங்கத்தினர் கோரிக்கை

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.கலைமணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.ஆனால், தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி நடைமுறைகள் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக உள்ளன. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி நடவடிக்கைகளால் அனைத்து விவசாயிகளும் முழுமையாகப் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, 2025 மே 1-ஆம் தேதிக்கு முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்ற நிலையும், பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடன் தள்ளுபடி நடைமுறையும் விவசாயிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், 17 நிபந்தனைகளுடன் கூடிய கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் அளிப்பதாக இல்லை. இந்த நிபந்தனைகள் குறித்து அரசு வெளியிடும் பொது அறிவிப்புகளில் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாமல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு மட்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைப்பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை வட்டி இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தி, ஆண்டுதோறும் புதுப்பித்து வந்தனர். தற்போது கடன் தள்ளுபடி குறித்த தெளிவான முடிவு இல்லாததால் பல மாதங்களாக விவசாயிகள் கடனைச் செலுத்தாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டி இல்லாமல் கடனைச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிந்து, தற்போது வட்டியுடன் கடனைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.பல லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் அளவில் தள்ளுபடி வழங்கும் திட்டம் எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. நீண்ட காலமாக சேரும் வட்டிக்கே அந்தத் தொகை சென்றுவிடும் சூழல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உண்மையான பலன் கிடைக்காது.தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள பல லட்சக்கணக்கான விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை பல லட்சமாக இருக்கும்.குறுவை, சம்பா சாகுபடி பாதிப்புதற்போது குறுவை சாகுபடியும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காதது, மழையின்மை உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. சாகுபடி செய்த விவசாயிகளும் பல இடங்களில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.சம்பா சாகுபடிக்கான பணிகளும் பல்வேறு பகுதிகளில் தொடங்காத நிலையில் உள்ளன. இத்தகைய சூழலில் விவசாயிகள் கடன் சுமையிலும், சாகுபடி செலவு அதிகரிப்பாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.உரம், பூச்சி மருந்து, விதை, டீசல் உள்ளிட்ட விவசாய இடுபொருள்களின் விலையும், விவசாயத் தொழிலாளர்களின் கூலியும் தொடர்ந்து உயர்ந்துள்ளன. ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு அதற்கேற்ற விலை கிடைக்கவில்லை.தற்போது தமிழகத்தில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 மற்றும் ரூ.2,750 என்ற அளவில் விலை வழங்கப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை.தமிழகத்தைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,000-க்கும் அதிகமாக விலை கிடைக்கும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு மட்டும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.விவசாயிகள் செய்த உற்பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாத நிலைக்கு முக்கிய காரணங்களில் நெல்லுக்கான குறைந்த கொள்முதல் விலையும் ஒன்றாக உள்ளது.எனவே, தமிழக அரசு விவசாயிகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். அதேபோல், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்கி கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், வாழ்வாதாரத்தையே நம்பியுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரை நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை. கடனைச் செலுத்தவும் முடியாமல், மீண்டும் புதிய கடன் பெறவும் முடியாமல் விவசாயிகள் பெரும் குழப்பத்திலும் மன வேதனையிலும் உள்ளனர்.தமிழக அரசு பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை விவசாயிகள் வரவேற்கின்றனர். அதேநேரத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் அரசு உரிய அக்கறையுடன் செயல்பட வேண்டும்.விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுவது மட்டும் போதாது. அவர்களின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் சுமையிலிருந்து அவர்கள் விடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, தற்போதைய 17 நிபந்தனைகளுடன் கூடிய கடன் தள்ளுபடி நடைமுறையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதியின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.மேலும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர், விதை, உரம் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளின் தற்போதைய வேதனையான நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையை போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தொலைக்காட்சி நண்பர்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தமிழக அரசுக்கு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் எஸ்.கலைமணி தெரிவித்துள்ளார்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read