கும்பகோணம் யாத்ரா ஏஜென்சி மூலம் சென்ற 40 பேர் குறித்து கவலை
கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்பட்டு வரும் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 40 பேர், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, யாத்திரிகர்கள் சென்ற 3 வேன்களில் ஒரு வேன் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும், மற்ற 2 வேன்கள் பள்ளத்தாக்கில் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, யாத்திரையில் சென்றவர்களில் 21 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எஞ்சியவர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் வேன்களில் ஒன்றில், சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சையது சாதிக்கின் மகன் உமர் பாரூக்கும் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர்.மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்த கோரிக்கைநேபாளத்தில் சிக்கியுள்ள யாத்திரிகர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசும், இந்திய தூதரகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, யாத்திரிகர்களின் நிலை குறித்த உறுதியான தகவல்களை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.காணாமல் போன அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்ப வேண்டும் என்பதே குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்
