Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணத்தில் வழக்கறிஞர் கைது: 2 நாள்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு

கும்பகோணத்தில் வழக்கறிஞர் கைது: 2 நாள்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு

காவல்துறை நடவடிக்கைக்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம்

கும்பகோணம் தாலுகா காவல் நிலைய பெண் காவலருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு தொடர்பாக வழக்கறிஞர் ராபர்ட் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தினர் செப். 10, 11 ஆகிய இரு நாள்களும் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க உறுப்பினராக இருந்து, வழக்கறிஞர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றி வரும் ராபர்ட் என்பவருக்கும், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து கோர்ட் காவலராக பணியாற்றிவரும் பெண் காவலர் புவனேஸ்வரிக்கும் இடையே நீதிமன்ற வளாகத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக டிஎஸ்பி உத்தரவின்பேரில் ராபர்ட் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நீதிமன்றப் பாதுகாப்பில் இருந்த வழக்குக் கோப்புகளை பெண் காவலர் புவனேஸ்வரி தன்னிச்சையாக எடுத்துப் பார்த்ததாகவும், இதுகுறித்து ராபர்ட் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பெண் காவலரை பணி செய்யவிடாமல் ராபர்ட் ஒருமையில் பேசியதாகக் கூறி, புவனேஸ்வரி கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததைத் தொடர்ந்து, டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் ராபர்ட் கைது செய்யப்பட்டதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிமன்றத்துக்கோ, நீதிபதிக்கோ தகவல் தெரிவிக்காமலும், நீதிபதியின் முன் அனுமதி பெறாமலும், வழக்கறிஞர் சங்கத்துக்கு தகவல் அளிக்காமலும் ராபர்ட்டை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்த நடவடிக்கையை கும்பகோணம் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.மேலும், நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையில், நீதிமன்றத்துக்கு வரும் காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை நீதிபதிகள் முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும். பெண் காவலர் புவனேஸ்வரியின் கடந்த கால நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கும்பகோணம், பாபநாசம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களின் மாண்பைக் காக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தஞ்சாவூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, கும்பகோணம் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி, தலைமை நீதித்துறை நடுவர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதையடுத்து, செப். 10, 11 ஆகிய இரு நாள்களும் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியிருப்பது என கும்பகோணம் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.இந்தத் தீர்மானத்தை சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் கவனத்துக்கு பணிவுடனும், மரியாதையுடனும் சமர்ப்பிப்பதாக சங்கத் தலைவர் ஆர். சங்கர், சங்க செயலாளர் ஆர். கர்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.செய்தியாளர் அ.மகேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read