எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் சந்திப்புக் கூட்டம் திருச்சியில் இன்று (பிப்.12) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முஹைதீன், அஹமது நவவி, அபுபக்கர் சித்திக், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் நஸ்ருதீன், மாநில செயலாளர்கள் வழ. ஹஸ்ஸான், ஹமீது ஃபிரோஜ் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1.தெலுங்கானா மாநிலத்தைப் போன்று தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகின்றது. இடஒதுக்கீடு குறித்தும், சமூகத்தை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் அறிய சாதிவாரி கணக்கெடுப்பு முறையே ஆதாரமாகும் என்பதால், எஸ்டிபிஐ கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த விவகாராத்தில் பீகார், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பல்வேறு எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிந்து சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. அண்மையில் அண்டை மாநிலமான தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழும்போதும், மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க முற்படும்போதும் அந்த விவகாரத்தில் தலையிடும் உச்சநீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த தரவுகள் இல்லாததால் அதனை நிராகரித்து வந்தது. ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசுகளும் அதன் மீது அக்கறை காட்ட மறுத்து வந்தன. இந்நிலையில் தான் பீகார் மாநில அரசை தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து அதன் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம். விசாரணைக்கு வரும்போது சாதி அடிப்படையிலான விவரங்கள் தமிழக அரசிடம் இல்லாத பட்சத்தில் அது 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே சமூக நீதி திராவிட மாடல் அரசு, இந்த விவகாரத்தில் தட்டிக்கழிப்பு செய்யாமல் பீகார், தெலுங்கானா மாநில அரசுகளைப் பின்பற்றி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகின்றது.
2.ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி தமிழக அரசை வலியுறுத்துகின்றது. இதற்காக அமைக்கப்பட்ட கல்விக்கொள்கை வரைவுக் குழு, அரசிடம் அறிக்கை அளித்த பின்னரும் தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் சாயல்கூட இல்லாத, தமிழக அரசின் கல்விக் கொள்கை என்ன என்பதை தமிழக அரசு விரைவாக அறிவிப்புச் செய்து அதனை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் தாமதமானது, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக மாணவர்களை பலிகடா ஆக்கச் செய்திடும் என்பதால், தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகின்றது.
3.தமிழகத்தில் 28 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த ஊராட்சிகள் அனைத்தும் ஊராட்சி செயலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பல ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் கோலோச்சி வந்த நிலையில், தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்துள்ளதால் மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பு இல்லாமல் ஊராட்சி செயலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஊராட்சி செயலாளர்கள் ஒரே கிராம ஊராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிவதை தடுக்கும் பொருட்டு பணி மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை பணியிட மாற்றம் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகவே, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரின் உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகின்றது. அதோடு, பதவிக்காலம் முடிந்த உள்ளாட்சிப் பகுதிகளில் விரைவில் தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
4.ஒன்றிய பாஜக அரசால் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை நசுக்கும் தீய நோக்கத்துடனுடம், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளது. வக்ஃப் சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது. பாஜக அரசின் இந்த பிற்போக்கு நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு நடவடிக்கை கண்துடைப்பு நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. ஆகவே, முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மசோதாவை தோல்வியுறச் செய்திட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கேட்டுக்கொள்கின்றது.


