தமிழக மீனவர்கள் 47 பேர் கைது!: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டில் ஒரே நாளில் இவ்வளவு மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இது தமிழக மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்கத் தவறியதும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில் மெத்தனப் போக்கு கடைப்பிடிப்பதும் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால், மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, ஒன்றிய அரசு இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையும் தெரிவித்துள்ளார்.


