Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்கும்பகோணம் ஏஜேசி ஆங்கிலப் பள்ளி தாளாளர் மீது கொலைவெறி தாக்குதல்

கும்பகோணம் ஏஜேசி ஆங்கிலப் பள்ளி தாளாளர் மீது கொலைவெறி தாக்குதல்

கும்பகோணம் ஏஜேசி ஆங்கிலப் பள்ளி தாளாளர் மீது கொலைவெறி தாக்குதல்

நள்ளிரவில் 8 பேர் கைது – சொத்து தகராறா? முன்விரோதமா? மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை

கும்பகோணம் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. AJC English School தாளாளர் பாஸ்டர் சி. ஞானதாஸ் மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் 8 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் இயங்கி வரும் பாரம்பரிய சிறப்புமிக்க ஏஜேசி ஆங்கிலப் பள்ளி (CBSE) கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக பணியாற்றி வரும் பாஸ்டர் சி. ஞானதாஸ், சம்பவம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளி வளாக அலுவலகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பள்ளி வளாகத்தின் பின்புற மதில் சுவரை ஏறி குதித்து திடீரென உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கையில் இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த அவர்கள், முதலில் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன், மின்சார இணைப்புகளையும் துண்டித்துள்ளனர்.

இதனை கண்ட பள்ளி வளாகத்தில் பணியாற்றி வந்த மூதாட்டி நீலாவதி அலறி கூச்சலிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் உதவி கோரியதாகவும் தெரியவருகிறது. பாதுகாப்பு பணியாளர்களை ஆயுதங்களால் அச்சுறுத்திய மர்ம கும்பல், நேரடியாக அலுவலக அறைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

அங்கு இருந்த பாஸ்டர் ஞானதாஸை சரமாரியாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். குறிப்பாக தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், காயமடைந்த ஞானதாஸை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சம்பவம் நடைபெற்ற போது அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய கும்பலில் சிலர் மெயின் கேட் வழியாகவும், மற்றவர்கள் மதில் சுவர் ஏறி குதித்தும் தப்பியோட முயன்ற நிலையில், போலீசார் மூவரை சம்பவ இடத்திலேயே விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் ஐந்து பேரை நள்ளிரவே கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பல் அலுவலகத்தில் இருந்த கணினி மற்றும் முக்கிய உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக்குப் பின்னால் பள்ளி மற்றும் அதன் சொத்துகளை அபகரிக்கும் நோக்கம் இருக்கலாம் என பள்ளி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பள்ளி வளாக அமைப்பு மற்றும் தாளாளர் ஞானதாஸின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த நபர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த “டொனால்டோ” என்ற பாஸ்டர் இந்த சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டதாக பள்ளி நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. போலி பத்திரங்களில் கையெழுத்திட வற்புறுத்தியதுடன், மறுத்தால் கொலை மிரட்டலும் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை காலை கிறிஸ்தவ ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் முக்கிய நபர்களை உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகே தாக்குதலின் உண்மையான பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் அ. மகேஷ்

Must Read