தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் மேலக்காவேரி பெருமாண்டி தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆஷாட குப்த நவராத்திரி விழாவையொட்டி, வியாழக்கிழமை மாலை ஸ்ரீ வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
ஸ்ரீ வராஹி அம்மன் சிறப்பு ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கடந்த ஜூலை 15-ஆம் தேதி ஆஷாட குப்த நவராத்திரி விழா தொடங்கியது. இந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் ஒன்பது நாட்களும் துர்காதேவி, வாராஹி, மற்றும் தசமகாவித்யா தேவியரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக வராஹி அம்மன் வழிபாட்டிற்கு இந்த நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்.
விழா நாட்களில் தினமும் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம், சிறப்பு ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் வராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட புனித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கான மண்டகப்படி உபயத்தை பாஸ்கர்–அமுதா குடும்பத்தினரும், சதீஷ்–அருணா குடும்பத்தினரும் செய்திருந்தனர்.
விழா நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலக்காவேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை தரிசித்து அருளாசி பெற்றனர்.நவராத்திரி விழாவையொட்டி திருக்கோவில் முழுவதும் மலர் மற்றும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தி நிறைந்த ஆன்மிக சூழலில் விழா சிறப்பாக நடைபெற்றது.
செய்தியாளர் அ.மகேஷ்

