இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம்
கும்பகோணத்தில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் விரைவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தஞ்சை வடக்கு மாவட்டக் குழு கூட்டம் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை கும்பகோணம் பழைய பேருந்து நிலையம், காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏஐடியூசி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, மாவட்டத் தலைவி பி. தாமரைசெல்வி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் எம். கவிதா வரவேற்றார் மாநிலக் குழு முடிவுகள் மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து மாவட்டச் செயலாளர் பா. சரண்யா உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எம். ராஜலக்ஷ்மி மாவட்ட நிர்வாகிகள் எம். பிரியா, ஜெ. சந்திரா, கே. கலைச்செல்வி, எம். ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கூட்டத்தில், கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஏ.ஆர்.சி. கருத்தரித்தல் மருத்துவமனை அருகில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அந்தக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர்.மேலும், இதுதொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்து முறையிடவும், உறுதியேற்றனர். உரிய நடவடிக்கை இல்லை என்றால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதேபோல், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும், பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும், பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும், தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு மற்றும் வங்கிக் கடன் வழங்க வேண்டும், தொழில் தொடங்க மானியத்தின் அடிப்படையில் பெண்களுக்கு நுண்கடன் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யாநல்லூர், பந்தநல்லூர், குறிச்சி, கருப்பூர், நெய்குப்பை, தத்துவாஞ்சேரி, வீராக்கண், ஸ்ரீரங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடிமனைப் பட்டா வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், தனியார் சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் நின்று கொண்டே பணி செய்வதை முழுமையாக ஒழித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பெண்கள் அமர்ந்து பணியாற்றும் வகையில் இருக்கை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.செய்தியாளர் அ.மகேஷ்

