ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜேசிஐ தேசிய ஆளுநர் ஜேஎப்சி. பாரத் என். ஆச்சார்யா பங்கேற்றார். கும்பகோணம் பாலாஜி பவனில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கும்பகோணம் வந்த தேசிய ஆளுநர் பாரத் என். ஆச்சார்யாவுக்கு, பாரம்பரிய முறைப்படி மங்கள இசை முழங்க பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் அவரை அமர வைத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஜேசிஐ நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.நிகழ்ச்சியில் தேசிய ஆளுநர் பாரத் என். ஆச்சார்யா பேசியதாவது:ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டி கடந்த ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதற்கு உறுப்பினர்களின் ஒற்றுமையும், கடின உழைப்புமே காரணம். ஓர் அமைப்பின் உண்மையான பலம் அதன் உறுப்பினர்கள்தான். எதிர்காலத்தில் தலைமைத்துவம், இளைஞர் மேம்பாடு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி செயல்பட வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டி தலைவர் ஆர். அருண் பிரகாஷ், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் மோதீஸ்வரன், மண்டலத் தலைவர் மற்றும் ஜேசிஐ கும்பகோணம், ஜேசிஐ மயிலாடுதுறை, ஜேசிஐ திருவாரூர் கிளைகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்
