அயோத்தி: சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்றும் இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்து முடிந்தது.
கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பிரான் பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்தார். கோவில் கருவறையில் கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார்.
இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். இந்த நிலையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய பிரதமர் மோடி முக்கிய முடிவாக இந்த திட்டத்தை எடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:- “சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்களின் மின்சுமை குறையும்.
எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெறும். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ பிரதமர் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம் தொடங்கப்படும். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இது.” என்று கூறியுள்ளார்.


