ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் நேற்றைய தினம் முதற்கட்டமாக 12 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கு வரும் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் 57.26 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என அம்மாநில முதல்- மந்திரி பஜன்லால் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக ராஜஸ்தான் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நேற்றைய தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் சற்று குறைவாக இருந்தாலும், 12 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.


